‘சிஎஸ்கே புதிய தல... வேற லெவல்!’ - சஞ்சு சாம்சனுக்கு ருதுராஜ், ஃபிஞ்ச் புகழாரம்
உலகக்கோப்பை டி20யில் பிரமாதமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களுக்குப் பிறகே ஐபிஎல் 2026 தொடர் தொடங்க திணறிய சாம்சன் முதல் 3 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். பிறகு 3 அரைசதங்களுடன் மீண்டும் மேட்ச் வின்னிங் பாதைக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முதுகெலும்பு சஞ்சுதான் என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும், ‘வேற லெவல்’ பேட்டிங் என்று ஏரோன் பிஞ்ச்சும் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை விதந்தோதியுள்ளனர். நேற்று டெல்லி அணிக்கு எதிராக ஸ்லோ ஸ்பின் பிட்சில் பந்துகள் திரும்பும் சூழ் நிலையில் 52 பந்துகளில் 87 ரன்கள் என்ற அற்புதமான இன்னிங்ஸை ஆடி அசத்தி வெற்றி பெறச் செய்தார்.
சிஎஸ்கேயில் அகீல் ஹுசைன், நூர் அகமது இருப்பது தெரிந்தும் டெல்லி எப்படி ஸ்பின் பிட்சைப் போட்டது என்பது தெரியவில்லை. அது ‘உஷ் கண்டுக்காதீங்க...!’ விஷயமாகக் கூட இருக்கலாம். ஆனால் சஞ்சு இப்போது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் புதிய ‘தல’யாக உருவாகி வருகிறார். இந்நிலையில் ஏரோன் பிஞ்ச் சஞ்சு சாம்சன் பேட்டிங் பற்றிக் கூறுகையில், “முதலில் ஒன்றிரண்டு போட்டிகளில் அவர் ரன்கள் எடுக்கத் தவறினார். உடனே சிஎஸ்கே என்ன செய்து விட்டது, இவரைப் போய் எடுத்ததே என்றேல்லாம் பதற்றங்கள் அதிகரித்தன. சிஎஸ்கே போன்ற அணியில் ஆடுவது என்பது எவ்வளவு பெரிய அழுத்தம் கொடுக்கும் என்பது பலருக்குப் புரியாது. அதுவும் ஜடேஜாவை அனுப்பி விட்டு சஞ்சு சாம்சன் வந்திருக்கிறார் என்றால் அழுத்தத்தின் அளவை ஒருவர் ஊகிக்க முடியும். இதற்குத்தானே சஞ்சு சாம்சனை டிரேட் செய்தனர். இவர்கள் எதிர்பார்த்துக் கதறும் சூப்பர்ஸ்டாருக்காகத்தானே இந்த டிரேடிங். அதுவே சஞ்சுவை பெரிய உந்துசக்தியாக நகர்த்தியுள்ளது. இப்போது அவர் வேற லெவல் பேட்டிங் செய்கிறார், பார்ப்பதற்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார் ஃபிஞ்ச்
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறும்போது, “உலகக் கோப்பையிலும் சரி, இப்போதும் சரி, சஞ்சு அணியில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, வெளிப்படையாகவே கூறுகிறேன் அவர் இப்போது சிஎஸ்கே அணியின் முதுகெலும்பாக இருக்கிறார்.” என்றார். சிஎஸ்கே அணி இப்போது 10 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் 2 போட்டிகள் அடுத்தடுத்து சிஎஸ்கேவுக்கு உள்ளது எனவே அந்தப் போட்டிகளில் வென்று அட்டவணையில் மேலும் முன்னேற சிஎஸ்கே திட்டமிடும் என்பதில் ஐயமில்லை.