Select Location
All Locations
State
Region
City / District
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா: விரைவில் புதிய அரசு அமைக்க நடவடிக்கை

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா: விரைவில் புதிய அரசு அமைக்க நடவடிக்கை

புதுச்சேரி: துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமி இன்று அளித்தார். விரைவில் புதிய அரசு அமைக்க நடவடிக்கை மேற்கொள்கிறார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 12 சீட்கள், பாஜக 4 சீட்டுகள், அதிமுக, லஜக தலா 1 ஒரு சீட்டு என 18 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு 16 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 18 எம்எல்ஏக்கள் இருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடர்வது உறுதியாகியுள்ளது. முதல்வர் ரங்கசாமியின் புதிய அரசு அமைப்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நிர்மல் குமார் சுரானா ஆகியோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பாஜகவுக்கு ஒரு அமைச்சர் பதவி மட்டுமே வழங்க முடியும் என முதல்வர் ரங்கசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதனால் பேச்சுவார்த்தை தொடராமல் உள்ளது. மத்திய அமைச்சர் டெல்லி புறப்பட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்வர் ரங்கசாமி சேலத்தில் தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு சென்றார். அங்கு வென்ற எம்எல்ஏக்கள் சான்றிதழ்களை வைத்து பூஜை செய்து புதுச்சேரி திரும்பினார். இதனிடையே, முதல்வர் ராஜினாமா கடிதம் இல்லாமலேயே நேற்றைய தினம் 15-வது சட்டப்பேரவை ஆளுநர் உத்தரவுப்படி கலைக்கப்பட்டதாக பேரவைச் செயலர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் இன்று காலை துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு விரைந்த முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி வழங்கினார். அதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் கேட்டதற்கு, "நாளை வெள்ளிக்கிழமை பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதையடுத்து பாஜக, அதிமுக, லஜக ஆதரவு கடிதங்களை பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். தொடர்ந்து வளர்பிறையில் ஐந்தாவது முறையாக பதவியேற்கவுள்ளார்." என்று என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன.


Hindu Tamil 2 days ago
Home Flash News