Select Location
All Locations
State
Region
City / District
புதுச்சேரி முதல்வராக மே 13ல் மீண்டும் பதவியேற்கிறார் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வராக மே 13ல் மீண்டும் பதவியேற்கிறார் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியோடு இரு பாஜக எம்எல்ஏக்கள் இருவர் மே 13-ல் பதவியேற்கிறார்கள். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமையும் ஆட்சியில் கடந்த முறையை போலவே பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரு அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்படும் என ரங்கசாமி தெரிவித்திருந்தார். நேரடியாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவி வழங்க முதல்வர் ரங்கசாமி சம்மதித்துள்ளார்.

நாளை மறுநாள் 13-ம் தேதி புதன்கிழமை காலை ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். முதல்வரோடு பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ளனர். பாஜக சட்டமன்ற கட்சித்தலைவர் நமச்சிவாயம், காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கான விழா, ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெற உள்ளது. ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர், அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அமைச்சர்கள் எப்போது பதவியேற்பார்கள் என்று விசாரித்தபோது, "முதல்வர் முதலில் பதவி ஏற்பார். என்ஆர்.காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. அவர்கள், வேறொரு நாளில் பதவியேற்பார்கள். என்.ஆர்.காங்கிரசில் மல்லாடிகிருஷ்ணாராவ், ராஜவேலு ஆகியோருக்கு அமைச்சர் பதவி உறுதியாகியுள்ளது. மற்றொரு அமைச்சர் பதவிக்காக சிவகொழுந்து, நாராயணசாமி ஆகியோர் முயற்சிக்கின்றனர்" என்றனர். தேர்தல் முடிவுகள்: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும், லட்சிய ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் திமுக 5 தொகுதிகளிலும், தவெக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், நேயம் மக்கள் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் மூன்று பேர் வெற்றி பெற்றனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News