இந்த வார விசேஷங்கள்
11.5.2026 - திங்கள் திருநாவுக்கரசர் குருபூஜை
சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் அடிகளாரின் குருபூஜை ஆண்டுதோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தன்று(இன்று) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அவர் முக்தியடைந்த தலமான திருப்புகலூர் (நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ளது.அன்றைய தினம் திருப்புகலூர் கோயிலில் அப்பர் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும், அவர் இறைவனோடு கலந்த நிகழ்வை நினைவுகூரும் ‘‘முக்தி திரு விழாவும்” நடைபெறும். இந்த நன் னாளில் சிவபெருமான் கோயில்களில் அப்பர் எழுதிய தேவாரப் பதிகங்களை (குறிப்பாக நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் திருமுறைகள்) பாடுவது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. உழவாரப் பணிகள் மேற்கொள்வதும் அவருக்குச் செய்யும் சிறந்த மரியாதையாகும்.
11.5.2026 - திங்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தி
உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி (J. Krishnamurti) அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆந்திரப் பிரதேசத்தில் மதனப்பள்ளி என்ற ஊரில் பிறந்தவர். சுருக்கமாக ஜே.கே (JK) என்று அழைக்கப்பட்டார். இவர் மனித மனத்தின் இயல்பு, தியானம் மற்றும் சுதந்திரம், ஞானம் குறித்து ஆழமான கருத்துக்களை முன்வைத்தவர்.‘‘உண்மை என்பது பாதையற்ற நிலம்” (Truth is a pathless land) என்பது இவரது புகழ்பெற்ற வரிகளில் ஒன்று. எந்த ஒரு மதமோ, குருவோ, அமைப்போ மனிதனை உண்மையை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது, மனிதன் தனக்குத்தானே ஒளியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை படியுங்கள். அவரே உங்களுக்கு புரிதலையும் தருவார் என்றால் மிகையில்லை. ஜே.கே. இந்த நூற்றாண்டில் தோன்றிய இணையற்ற ஞானி. நம்முள் நாமாக விழிப்புணர்வாக இருக்கிறார். சென்னை ஆர்.எ. புரத்திலுள்ள க்ரீன்வேஸ் சாலையில் உள்ள கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனுக்கு அவ்வப்போது சென்று வாருங்கள். சென்னை நகரின் மத்தியில் இப்படியொரு இயற்கை சூழலோடு அமைந்துள்ள தவக் குகை போன்ற இடம். ஜே.கே கிருஷ்ணமூர்த்தி. வாழ்வைக் குறித்த அனைத்து விஷயங்களையும் அந்த இடத்தில் அமர்ந்து உரையாற்றி இருக்கிறார். அந்த சத்தியத்திலிருந்து பேசியிருக்கிறார்.
எனவே, என்றென்றும் அந்த இடம் அந்த வார்த்தைகளற்ற மொழியற்ற மொழியை வார்த்தைகளை அந்த இடத்தில் தேக்கி வைத்துள்ளன. நீங்கள் உள்ளே நுழையும்போதே அந்த உள்ளாழ்ந்த விசாரம் செய்த இடத்தின் ஏதோவொரு சக்தி உங்களை தொடுகின்றன என்று மட்டும் நான் சொல்வேன். ஏனெனில், ஞானிகள் எந்தெந்த இடத்தில் அமர்ந்து தீவிரமாக பேசியிருக்கிறார்களோ அந்த இடங்கள் வேறுவிதமான தன்மையை அடைகின்றன. அங்கு சென்று ஜே.கே. உரையாற்றிய மாபெரும் புல்வெளிக்கு அருகே அமர்ந்து அமைதியாக அமருங்கள். நீங்கள் வழிபடுவதற்கோ அல்லது பூஜை செய்வதற்கு என்று எதுவும் இருக்காது. பெரிய நூலகம் மட்டும் உண்டு. அந்த புல்வெளி வளாகம் உண்டு. நீங்கள் வந்து அமர்ந்து, படித்து, சிந்தித்து, உங்களுக்குள் விசாரிக்கத் தொடங்குங்கள். தொடங்குங்கள் என்றுதான் சொல்ல முடியும். மீதியை அந்த சத்தியமே பார்த்துக் கொள்ளும். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களே இங்கு ரகசியச் சாவி. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் என்கிற இடமே அந்த சாவியையோ அல்லது உங்களுக்குள் ஏதேனும் மாற்றத்தை அளிக்கும் இடமென்றும் கூட வைத்துக் கொள்ளுங்கள். இது என் தனிப்பட்ட அபிப்ராயம். ஆனாலும், நிச்சயம் நீங்கள் போக வேண்டுமென்று இந்த பிறந்த நாளில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இன்று என்று இல்லாவிட்டாலும் எப்போது நேரம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் போகப் பாருங்கள்.
13.5.2026 - புதன் வர்த்தினீ ஏகாதசி
‘வருதினி’ என்றால் ‘பாதுகாப்பவர்’ என்று பொருள். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களைத் தீமைகளிலிருந்தும், துரதிர்ஷ்டத்திலிருந்தும் காக்கும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை முறையாகக் கடைபிடிப்பது, பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்ததற்கும் அல்லது குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணத்தின் போது தங்கத்தை தானம் செய்ததற்கும் சமமான பலனைத் தரும் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்நாளில் விஷ்ணுவின் அவதாரமான வாமன மூர்த்தியை வழிபடுவது வழக்கம். இது ஒருவருக்கு மறுபிறவியற்ற மோட்ச நிலையை வழங்க வல்லது.ஏகாதசி அன்று தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். முடிந்தால் முழு உபவாசம் இருப்பது சிறப்பு.அன்றைய தினம் துளசி செடிக்கு விளக்கேற்றி வழிபடுவது விஷ்ணுவின் அருளைப் பெற்றுத் தரும்.
13.5.2026 - புதன் திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆராதனை
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் ஆராதனை என்பது அவர் மகாசமாதி அடைந்த நாளை நினைவு கூரும் ஒரு புனிதமான நிகழ்வாகும். ரமண ஆராதனை திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் சந்நதியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ரமண மகரிஷிகள் அருளிய ‘‘அருணாசல அட்சரமணமாலை” மற்றும் ‘‘உள்ளது நாற்பது” போன்ற நூல்கள் பக்தர்களால் கூட்டாகப் பாராயணம் செய்யப்படும். பகவான் ரமணர் வாழ்ந்த காலத்தில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். அதைப் பின்பற்றி, ஆராதனை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் உணவு வழங்கப்படும்.
14.5.2026 - வியாழன் ஸ்ரீ ரங்கம் சித்திரைத் தேர்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில், சித்திரை மாதத்தில் நடைபெறும் ‘விருப்பன் திருநாள்’ (சித்திரைத் திருவிழா) மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரைத் தேர் (விருப்பன் தேர்) திருவிழா இன்று நடைபெறுகிறது. விஜயநகர மன்னரான விருப்பண உடையார் என்பவர், டெல்லி சுல்தான்களின் படையெடுப்பிற்குப் பிறகு ஸ்ரீ ரங்கம் கோவிலை மீட்டெடுத்து, இந்த சித்திரை விழாவை மீண்டும் சிறப்பாகத் தொடங்கினார். அதனால் அவர் பெயரிலேயே இது ‘விருப்பன் திருநாள்’ என்று அழைக்கப் படுகிறது. சித்திரை மாதத் திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இதில் ஒன்பதாம் நாள் அன்று பெரிய தேரோட்டம் (சித்திரைத் தேர்) நடைபெறும்.