கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தின் பேச்சுக்கு எதிர்வினையாற்றும் வகையில் நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட நையாண்டி கட்சியான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. போலிச் சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் ஆம் ஆத்மியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே, ’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி - Cockroach Janta Party) என்ற பெயரில் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடங்கினார். அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில், வேலையில்லாமல், சோம்பேறியாக, ஆன்லைனில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும், ஆவேசமாக பேசும் திறன் கொண்ட இளைஞர்கள் இணையலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சோம்பேறி ஆகியவற்றை கொள்கையாக அறிவிக்கப்பட்ட இந்த கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை, நான்கே நாள்களில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடரத் தொடங்கினார்கள்.
ஜென் ஸி, இளைஞர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அரசியல் தலைவர்களும் இந்த பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று எக்ஸ் தளம் முடக்கியுள்ளது. சட்டரீதியான கோரிக்கைக்கு இணங்க, இந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.