Select Location
All Locations
State
Region
City / District
“கொஞ்சம் பொறாமைதான்...” - விஜய் ஆட்சியைப் பிடித்தது குறித்து பவன் கல்யாண் ஓபன் டாக்

“கொஞ்சம் பொறாமைதான்...” - விஜய் ஆட்சியைப் பிடித்தது குறித்து பவன் கல்யாண் ஓபன் டாக்

அமராவதி: “தமிழகத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிறார்கள். என்னால் அது முடியவில்லை” என்று ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அவரது கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதை பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அவர் பேசிய அந்த வீடியோவும் இப்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் அவர் பேசியது: “தமிழக அரசியலை இப்போது நான் கவனித்து வருகிறேன். அவர்கள் மிக எளிதாக அரசியல் செய்கிறார்கள். கட்-அவுட் மற்றும் ஹாலோகிராம் மூலம் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, முதல்வர் ஆக முடிகிறது. எனக்கு அது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. நான் 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். என்னால் அது முடியவில்லை. அது குறித்து நான் ஆலோசித்தேன்.

அரசியல் கட்சியை நடத்த வேண்டுமென்றால் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏதேனும் பேச வேண்டுமென்றால் அது குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனது அரசியல் பயணத்தை தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் எழுச்சியோடு ஒப்பிடுவது குறித்து ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்திருந்தார். “தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நாம் ஏன் ஆந்திராவில் கூட்டணி அமைத்தோம் என்ற கேள்வியை நம் ஆதரவாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், ஆந்திராவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் அரசியல் சூழல் என்பது வேறுபட்டு உள்ளது.

சமூக மாற்றம் வேண்டுமென்ற நோக்கத்துடன் அரசியல் கட்சியை நான் தொடங்கினேன். முன்னாள் முதல்வர் என்டிஆரின் அரசியல் பயணத்தை பார்த்துள்ளேன். அதேநேரத்தில் நக்சலிச கொள்கைக்காக இளைஞர்கள் உயிர் தியாகம் செய்ததையும் பார்த்துள்ளேன். அந்த அனுபவங்கள் என்னை ஆழமாக சிந்திக்க செய்தது. அதனால் எனக்கு பொது வாழ்வில் பதவி மற்றும் அதிகாரத்தை காட்டிலும் சித்தாந்தம், கொள்கை மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன். அந்த எண்ணத்துடன் தான் இந்த கட்சியை வழிநடத்துகிறேன். தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு இருக்க வேண்டும் என்றும், தெலுங்கு தேசம் கட்சி உடன் கூட்டணி வைத்திருக்க கூடாது என்றும் இப்போது நீங்கள் எல்லோரும் கருதலாம். அப்படி நம் கட்சியின் தொண்டர்கள் சொல்வது எனது காதிலும் படுகிறது. நாம் தனித்து போட்டியிட்டு இருக்கலாம்.

மசூலிப்பட்டினம் கூட்டத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் திரண்டார்கள். ஆனால், ஆந்திரா இப்போது எதிர்கொண்டுள்ள சூழல் என்பது மிகவும் இக்கட்டான காலகட்டம். சந்திரபாபு நாயுடு மாதிரியான ஒரு தலைவர் சிறையில் அடைக்கப்பட்டார். அத்தகைய சூழலில் தான் நாம் ஆதரவை தெரிவித்தோம். இது நம் மாநிலத்தின் எதிர்காலம் சார்ந்த முடிவு” என்று அப்போது பவன் கல்யாண் பேசியிருந்தார். சிரஞ்சீவி வாழ்த்து: கடந்த வாரம் முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் சிரஞ்சீவி, தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அப்போது சிறந்த ஆட்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கள் இடம் பிடிப்பீர்கள் என சிரஞ்சீவி நம்பிக்கை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Hindu Tamil 6 days ago
Home Flash News