Select Location
All Locations
State
Region
City / District
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் மிகவும் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த வைகாசி 6-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதையொட்டி தினமும் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தினமும் இரவில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 8.10 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், தொகுதி எம்எல்ஏ ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முதலில் விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது. அதன் பின் திருக்காமீஸ்வரர் அம்மன் ஆகிய தேர்கள் இழுத்துச் செல்லப்பட்டன. இந்த தேர் திருவிழாவில் வில்லியனூர் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் பகுதிகளில் இருந்தும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Hindu Tamil 4 days ago
Home Flash News