2000 ஆண்டுகள் பழமையான ஏழூர் கண்ணாடி பல்லக்குத் திருவிழா!
2000 ஆண்டுகள் பழமையான கரந்தை கருணா சுவாமி கோயிலில் கண்ணாடி பல்லக்கு திருவிழா இன்று(ஜூன் 1) நடைபெற்றது. தஞ்சாவூர் அடுத்த கரந்தையில் பெரியநாயகி உடனுறை கருணா சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், பெரிய கோயில் கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்டது. இது, வசிஷ்டர் பூஜை செய்த தலம் ஆகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல, இந்த ஆண்டு கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஏழூர் கண்ணாடி பல்லாக்கு திருவிழா இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லாக்கில் பெரிய நாயகியுடன் கருணா சுவாமி எழுந்தருளி வெண்ணாற்றங்கரை, திருக்கூடலூர், புன்னைநல்லூர், திட்டை உள்ளிட்ட ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து மீண்டும் நாளை மாலை கோயில் வந்தடையும்.
இதனைத் தொடர்ந்து. பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெறுகிறது. ஏழூர் கண்ணாடி பல்லாக்கில் புறப்பட்ட இறைவன் - இறைவியை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.