பிலிப்பைன்ஸ், வியட்நாமை தொடர்ந்து இந்தோனேசியாவுக்கும் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை
புதுடெல்லி: வியட்நாமை தொடர்ந்து, இந்தோனேசியாவுக்கும் இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் (ஒலியை விட அதிவேகமாகச் செல்லும்) ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஷாங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றபோது அவர் இதுகுறித்து கூறுகையில், ‘‘வியட்நாம் நாட்டுடனான பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இதேபோல், இந்தோனேசியா நாட்டுடனான பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் அந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும்’’ என்றார்.
வியட்நாமுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.5,800 கோடி என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், கடற்கரைப் பாதுகாப்புக்கான ஏவுகணை, பேட்டரிகள், அவற்றை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் தளவாட உதவிகளை இந்தியா வழங்கவுள்ளது. மேலும், பிற்காலத்தில் போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளையும் வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் சுமார் 375 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, முதன்முதலாக இந்த ஏவுகணையைப் பெற்ற வெளிநாடு என்ற பெருமையைப்பெற்றது. இந்த நிலையில் தற்போது வியட்நாமைத் தொடர்ந்து இந்தோனேசியாவும் இந்த வரிசையில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கும், அதன் அண்டை நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் இடையே கடல் எல்லைப் பகிர்வு தொடர்பாக நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவின் ஏவுகணைகளை இந்த நாடுகள் வாங்குவது குறிப்பிடத்தக்கது.