Select Location
All Locations
State
Region
City / District
“எங்களை துடைத்தெறிய முடியாது” - டெல்லி போராட்டத்தில் கஜக நிறுவனர் அபிஜித் தீப்கே முழக்கம்

“எங்களை துடைத்தெறிய முடியாது” - டெல்லி போராட்டத்தில் கஜக நிறுவனர் அபிஜித் தீப்கே முழக்கம்

புதுடெல்லி: “நீங்கள், எங்களது சமூக வலைதள பதிவுகளை நீக்கலாம். ஆனால், எங்களை துடைத்தெறிய முடியாது” என்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே பேசினார். தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு முறைகளில் குளறுபடி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மத்தியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே பேசியது: “தோழர்களே, இது மிக நீண்ட போராட்டம் ஆகும். அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென சமூக வலைதள மூலம் நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கு செவி கொடுக்காதவர்கள், நமது பதிவுகளை நீக்குவது, கணக்குகளை முடக்குவது, ஹேக் செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

நண்பர்களே, இது ஒரு நீண்ட போராட்டமாகும். சமூக ஊடகங்களில் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை நாங்கள் வலியுறுத்தத் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், எங்கள் கணக்குகளை முடக்குவது (hacking) மற்றும் எங்கள் பதிவுகளை நீக்கச் செய்வது போன்ற கவனத்தைத் திசை திருப்பும் செயல்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நமது பதிவுகளை வேண்டுமானால் நீக்கலாம். ஆனால், இந்தப் பொதுவெளியில் இருந்து எங்களை அவர்களால் துடைத்தெறிய முடியாது" என்றார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி: இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற நையாண்டி இயக்கம், தற்போது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளது. அமெரிக்​கா​வில் உள்ள அபிஜித் தீப்கே என்பவர் இந்தக் கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில், பல்வேறு போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் கல்வித் துறையில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்வைத்தது. இது தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சி வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தது. இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல் துறையும் அனுமதி அளித்தது. சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடத்தலாம் என காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. அதேநேரத்தில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்கள் பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டனர். இவர்களுடன் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவும் இணைந்துள்ளார். இன்று காலை அமெரிக்காவில் இருந்து அவர் டெல்லி வந்திருந்தார். விமான நிலையத்துக்கு வந்த அவர், தனது கையில் அம்பேத்கரின் சுயசரிதை புத்தகத்தை வைத்திருந்தார். அது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முதல் கள போராட்டமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News