Select Location
All Locations
State
Region
City / District
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு மிக அருகில் உள்ளது: ஈரான்

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு மிக அருகில் உள்ளது: ஈரான்

தெஹ்ரான்: அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு மிக அருகில் உள்ளது. அது இறுதி செய்யப்படும் வரை, அதன் உள்ளடக்கம் குறித்த ஊகங்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். எங்களின் பொறுப்பான, வெளிப்படையான அணுகுமுறையின்படி, அனைத்து விவரங்களும் உரிய நேரத்தில் பொதுமக்களுடன் பகிரப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் அறிவித்தார்.

இது குறித்துத் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், “ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் அந்த நாட்டின் மிக உயர்மட்டத் தலைமை வரை கொண்டு செல்லப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், அமெரிக்க அதிபர் என்ற முறையில், இன்று ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் நான் ரத்து செய்துள்ளேன். இந்த விவாதங்களும் இறுதிப் புள்ளிகளும், அடிப்படைக் கருத்துருவிலும் சரி, மிக விரிவான விவரங்களிலும் சரி, இதில் தொடர்புடைய அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் , கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான், எகிப்து மற்றும் பிற நாடுகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கை முழுமையாக இறுதி செய்யப்படும் வரை, கடற்படை முற்றுகை எவ்வித மாற்றமும் இன்றி முழு வீச்சில் தொடரும். இதற்கான அதிகாரபூர்வ கையெழுத்து நடைபெறும் நேரம் மற்றும் இடம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்திருந்தார். இந்த அதிரடி அறிவிப்பு, உலகளவில் கச்சா எண்ணெய் சந்தையிலும் சர்வதேச அரசியல் அரங்கிலும் நிலவி வந்த போர் அச்சத்தை சற்றே தணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Hindu Tamil 3 hours ago
Home Flash News