இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4.53 லட்சம் கோடி முதலீடு செய்கிறது அமேசான்
புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 48 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4.53 லட்சம் கோடி) முதலீடு செய்ய இருப்பதாக அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள ஆண்டி ஜாஸ்ஸி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பை அடுத்து, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் மின்னணு வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, சரக்குப் போக்குவரத்து, டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகளில் அமேசானின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் இந்த முதலீடு கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவில் அமெசானின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், மென்பொருள் உருவாக்குபவர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், பெரு நிறுவனங்களுக்கு நாங்கள் சேவையாற்றி வருகிறோம். இது எங்கள் பயணத்தின் ஆரம்பம் மட்டுமே
அடுத்த 5 ஆண்டுகளில் 48 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாகவும், அதில் 21 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்புக்காக ஒதுக்கப்படும் என்றும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். 2030-ம் ஆண்டுக்குள் 38 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 80 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு வர்த்தக ஏற்றுமதியைச் செயல்படுத்தவும், 1.5 கோடி சிறு வணிகங்கள், 40 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு செயற்கை நுண்ணறிவுின் பலன்களைக் கொண்டு சேர்க்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம். நாங்கள் உருவாக்கக்கூடிய விஷயங்களுக்கான ஆரம்பக் கட்டத்தில்தான் இன்னும் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். அமேசானின் முதலீட்டை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆண்டி ஜாஸ்ஸியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. இந்தியாவில் அமேசான் மேற்கொள்ளும் 48 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவிலான முதலீட்டை நான் வரவேற்கிறேன். இது நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதோடு, இந்தியாவில் முதலீடு செய்வதில் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் ஆர்வத்தையும் இது காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.