புரோ லீக் ஹாக்கி; பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா: 7-1 என அபார வெற்றி
லண்டன்: எப்.ஐ.ஹெச். (FIH) புரோ லீக் ஆக்கி தொடரில் இந்திய ஆண்கள் அணி, பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. லண்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணியின் அபு மஹ்மூத், பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதன்பிறகு ஆட்டத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் அணியின் தடுப்பாட்டத்தை தகர்த்த இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தினர். இந்திய அணிக்காக சுக்ஜீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், ஜுக்ராஜ் சிங், அபிஷேக், ராஜ்குமார் பால் மற்றும் தில்ப்ரீத் சிங் ஆகிய 7 வீரர்கள் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, 15 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணிக்கு இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. அந்த ஆட்டத்தில் நாளை இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.