பாலஸ்தீன குழந்தைகளை இஸ்ரேல் ‘குறி’ வைத்ததன் கொடூர விளைவுகள் - ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
‘இஸ்ரேல் ராணுவமும், அதிகாரிகளும் சேர்ந்து வேண்டுமென்றே, திட்டமிட்டு பாலஸ்தீன குழந்தைகளை குறிவைத்து கொலை செய்து, இன அழிப்பில் ஈடுபட்டுள்ளனர். மனிதநேயத்துக்கு எதிராக போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்று ஐ.நா.வின் சுயாதீன விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே தொடங்கிய போரிலிருந்து இதுவரை பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக நடந்த வன்முறைகள், அத்துமீறல்கள், கொடூரங்கள் குறித்து ஐ.நா.வின் சுதந்திரமான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசேலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்த அத்துமீறல்கள் மற்றும் குற்றங்களால், பாலஸ்தீன குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி, ஐ.நா.வின் இந்த சுயாதீன விசாரணை அமைப்பு, கடந்த ஜூன் 23-ம் தேதி அறிக்கையை வெளியிடப்பட்டது. இந்த விசாரணைக் குழுவின் தலைவராக இருக்கும் ஸ்ரீனிவாசன் முரளிதரர் அறிக்கையை வெளியிட்டார்.
என்ன கூறுகிறது ஐநா விசாரணை அறிக்கை?
இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில்களில் கொல்லப்பட்டவர்களில் 30% பேர் குழந்தைகள். 2025-ம் ஆண்டு அக்டோபரில் போர் நிறுத்தம் வந்தபின்பும்கூட பாலஸ்தீன குழந்தைகளை வேண்டுமென்றே இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து கொன்றுள்ளது. 3 ஆண்டுகள் நடந்த இந்தப் போரில் இதுவரை 73 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1.80 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 30 சதவீதம் பேர் குழந்தைகள், காயமடைந்தவர்களில் 26 சதவீதம் பேர் குழந்தைகள்.
கடந்த 2025-ம் ஆண்டு இதேபோன்று ஐ.நா. சுயாதீன விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டபோது, இஸ்ரேல் ராணுவம் காசாவில் இன அழிப்பில் ஈடுபட்டது குறித்து பகிரங்கமாக குற்றம்சாட்டியது. 2026-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி ஐ.நா. சுய விசாரணை ஆணையமும் தனது விசாரணை அறிக்கையிலும், இஸ்ரேல் ராணுவம், அதிகாரிகள், சேர்ந்து பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இரு அறிக்கைகளில் கூறப்பட்ட சாரம்சத்தையும், குற்றச்சாட்டையும் இஸ்ரேல் ராணுவம், அதிகாரிகள் ஏற்காமல் மறுத்துவிட்டனர். அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் பல இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்: இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே குழந்தைகளை கொலை செய்து போர்க் குற்றம் செய்துள்ளனர். இது மனிதநேயத்துக்கு எதிரானது. அழித்தொழிக்கும் செயல். இஸ்ரேல் ராணுவம் நடத்திய இன அழிப்பு நடவடிக்கையில், பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகளில் 2% பேரைக் கொன்றுவிட்டனர். இஸ்ரேல் ராணுவத்தின் மனிதநேயமற்ற செயலால் காசா நகரில் குழந்தைகள் உணவு, குடிநீர், கல்வி, சத்துள்ள உணவு கிடைக்காமல் மூச்சுமுட்டுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே, பாலஸ்தீனக் குழந்தைகளின் உடலில் காயத்தை ஏற்படுத்தி, அவர்களை சித்ரவதை செய்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடலில் ஏற்பட்ட காயம், உடல் உறுப்பு சேதம் ஆகியவை யதேச்சையாக குண்டுக் காயத்தால் மட்டும் ஏற்படவில்லை. காசா நகரில் பாலஸ்தீன மக்கள் யாரும் இருக்கக் கூடாது என்று அழிக்கவே இந்தச் செயலில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் முன்னெப்போதும் இல்லாத உயிரிழப்புகளையும், காயங்களையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி, அவர்களுக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இஸ்ரேலின் கொடூரத் திட்டம் என்ன?
இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். குறிப்பாக மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், பிரசவ மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி குழந்தைகளுக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தவும், அவர்களுக்கு உடல் ரீதியான நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தவும் முயன்றனர். கிழக்கு ஜெருசேலம், மேற்கு கரை பகுதியிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது.
மேற்குக் கரையில் குழந்தைகளுக்கு எதிராகவும், நியாயமற்ற வகையிலும் அளவுக்கு அதிகமான மற்றும் தண்டனை அளிக்கும் வகையிலான படைகளை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தினர். இதன்மூலம், குழந்தைகளைக் கட்டுப்படுத்தவும், அச்சுறுத்தவும், மிரட்டவும் ஒரு கருவியாக ராணுவம் பயன்படுத்தப்பட்டது. இஸ்ரேலின் மனித உரிமை அமைப்பான ‘பிடிசலீம்’ (B’Tselem) 2023 அக்டோபரில் இருந்து மேற்கு கரைப்பகுதியில் 236 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. காசா, மேற்கு கரைப் பகுதியில் குழந்தைகளை கூட்டமாகக் கைது செய்து, சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தது இஸ்ரேல் ராணுவம் எனத் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை அந்நாட்டில் கொல்லப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் குழந்தைகள், அதாவது 21,289 பேர் குழந்தைகள். அந்நாட்டில் காயமடைந்தவர்களில் 26 சதவீதம் பேர் குழந்தைகள், அதாவது 44,500 குழந்தைகள் காயமடைந்தனர். இந்தப் போரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 5,031 பேர் கொல்லப்பட்டனர். ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளங்குழந்தைகள் மட்டும் 1,029 பேர் ஈவிரக்கமின்றி இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தைகள் 420 பேரும் இஸ்ரேலின் ரத்தவெறிக்கு இலக்கானார்கள். இதுவரை 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன; 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாற்றுத் திறனாளிகள் ஆகியுள்ளனர்; 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கேட்கும் திறனை இழந்துள்ளனர்.