அதிர்வுகளைக் கிளப்பிய சட்லஜ் திரைப்படம் ஓடிடியிலிருந்து நீக்கம்!
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான சட்லஜ் திரைப்படம் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் செயல்பட்ட மனித உரிமைகள் போராளியான ஜஸ்வந்த் சிங்கின் உண்மைக் கதையாக உருவான சட்லஜ் திரைப்படம் 1985 - 1995 வரை பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் படுகொலை செய்ததாகக் கூறுகிறது. அதிகார அமைப்பின் இந்தக் கொடூரங்களை வெளியுலகுக்குக் கொண்டு வர போராடிய மனித உரிமைகள் போராளியான ஜஸ்வந்த் சிங் இறுதியில் என்ன ஆனார்? என்கிற கோணத்தில் செல்லும் இத்திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட அரசு அனுமதிக்கவில்லை.
திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென்றால் 120 இடங்களை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கூறியதால் நேரடியாகவே 2 நாள்களுக்கு முன் ஜீ 5 ஓடிடியில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஓடிடி வெளியீட்டில் இப்படத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்ததால் பெரிய விவாதம் உருவானது. இதன் காரணமாக, உடனே அப்படம் ஓடிடியிலிருந்து ( இந்தியாவில் மட்டும்) நீக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்கு எப்போதும் செவி சாய்க்க வேண்டிய அரசு, அதனை மீறுபவர்களைக் குறித்து திரைப்படம் எடுத்தால் தடை செய்கிறது என பலரும் தங்களின் ஆதங்கங்களைக் கூறி வருகின்றனர்.