சிங்கப்பெண் அதிரடி படைக்கு விரைவில் தலைமை அலுவலகம்..
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' பிரிவு, தனது முதல் மாதத்திலேயே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 120 பேர் மீது இந்த அதிரடிப்படை கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தி வரும் இப்படையினர், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி காணாமல் போன 36 குழந்தைகளை பத்திரமாக மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, உரிய நேரத்தில் விரைந்து செயல்பட்டதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருந்த 16 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இப்படைக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வருகிறது. பெண்களின் அவசர உதவிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 1091 என்ற எண்ணிற்கு, நாளொன்றுக்கு சராசரியாக 1,500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. இந்த அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவும், ஒருங்கிணைக்கவும் சென்னை அசோக் நகரில் அதன் புதிய தலைமை அலுவலகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் இந்த சிறப்பு படை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.