புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒப்புதல் அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சகம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.14,300 பட்ஜெட் உறுதி செய்யப்பட்டு அனுப்பிய நிலையில் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் சட்டமன்றத்தில் முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் புதுச்சேரி சட்டசபை கூடவுள்ளது. இந்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால், அதற்கு முன்னதாகவே கடந்த பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் தாக்கல் செய்தார். அதன்படி, ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாத கால அரசுச் செலவினங்களுக்காக ரூ.5,396 கோடி ஒதுக்கப்பட்டு சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் முடிந்து மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுப் புதிய ஆட்சி அமைந்த பிறகு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு முன் ஏற்பாடாக பட்ஜெட் தயாரிப்புக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், எந்தெந்தத் துறைகளுக்கு மற்றும் எந்தெந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில், 2026-27 நிதியாண்டிற்காக ரூ.14,300 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட புதிய முழு பட்ஜெட் வரைவு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால், அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அதன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும். பட்ஜெட் வரைவு அனுப்பப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில், தற்போது அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக, விரைவில் சட்டமன்றத்தைக் கூட்டி முழு பட்ஜெட்டை புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளார்.