Select Location
All Locations
State
Region
City / District
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

பசுக்கள், கன்றுகளைப் பொது இடங்களில் பலியிடத் தடை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

கடந்த மே மாதம் 28-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு முன்பாக, பக்ரீத் பண்டிகை நாளில், பசுக்களை இறைச்சி கூடங்களை தவிர, பொது இடங்களில் பலியிடுவதற்கு தடை விதிக்க கோரி இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சூர்ய பிரசாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பக்ரீத் பண்டிகை நாளான மே 28ஆம் தேதி மட்டுமன்றி, வேறு எந்த நாளிலும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகளை எந்தவொரு இடத்திலும் பலியிடுவதற்கு தடை விதித்து மே மாதம் 27ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்காகவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பசுக்களை பலியிட தடை விதித்து கடந்த 1976ஆம் ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில், பசுக்களை பலியிடுவதற்கு தடை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், "பக்ரீத் பண்டிகை நாளில், அனுமதிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில், குறிப்பாக பொது இடங்களில் பசுக்களை பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ, பக்ரீத் பண்டிகை மட்டுமல்ல வேறு எந்த நாளிலும், அனைத்து இடங்களிலும் பலியிடத் தடை விதித்துள்ளது" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது இடங்களில் மட்டுமே பசுக்களை பலியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மாநிலம் முழுவதும் உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது, சட்ட வரம்பை மீறிய செயல் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் திருத்தம் செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Smacy News 1 hour ago
Home Flash News