பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்: ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர்
சென்னை: சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெண்டரில், மாநிலம் முழுவதும் பெண்களின் வேலைவாய்ப்பு நிலை மற்றும் அவர்கள் வேலைக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, பாதுகாப்பு உள்ளிட்ட சவால்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வின் மூலம், பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தடையாக உள்ள பாதுகாப்பு குறைபாடுகள், குழந்தை பராமரிப்பு வசதியின்மை, திறன் பற்றாக்குறை, போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் சமூக காரணிகள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவற்றை களைய தேவையான பரிந்துரைகள் வழங்கப்பட உள்ளன.
அதேபோல், மாவட்ட வாரியாக எந்தெந்த துறைகளில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதையும் ஆலோசனை குழு பரிந்துரைக்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் பெண்களுக்கான திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, பாதுகாப்பான பணிச்சூழல், குழந்தை பராமரிப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. மாநில மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த பெண்களுக்கான தரமான வேலைவாய்ப்புத் திட்டம் (Women’s Quality Employment Plan) கட்டமைப்பையும் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.