போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!
ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் (ஜேஎன்யு) தில்லி பல்கலைக்கழகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி, தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்தப் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தில்லியில் உள்ள பல்கலைக்கழகங்கள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. தில்லி பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில், “அன்புள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பகுதியான புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், சட்டவிரோதக் கூட்டங்கள் அல்லது போராட்டங்களில் ஈடுபடுவது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கக்கூடும் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் தொழில்முறை வாய்ப்புகளையும் கணிசமாகப் பாதிக்கக்கூடும். எனவே, மாணவர்கள் அனைவரும் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்து, தங்கள் பாதுகாப்புக்கும் சட்டத்தைப் பின்பற்ற முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தற்போதைய சூழலைத் தீவிரப்படுத்தும் வகையில் ஏராளமான போலியான மற்றும் தவறான தகவல்கள் உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருவதால், நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில், “ஜேஎன்யு-வுடன் தொடர்புடைய அனைவரும் பொறுப்புடன் செயல்படுமாறும், தங்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பொது போராட்டங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதையோ அல்லது அங்கு செல்வதையோ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். சமூக ஊடகங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் சட்டரீதியான விளைவுகளையும், பல்கலைக்கழகத்தின் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளது.