நீதிமன்ற விசாரணையை வீடியோ எடுக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: நீதிமன்ற விசாரணைகளின் நேரலை வீடியோக்களை அனுமதியின்றி பதிவு செய்து, எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதற்கு எதிரான வழக்கு, தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சூர்யா காந்த், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் குறித்து தான் கூறிய கருத்துகளை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதால் தேவையற்ற விமர்சனங்கள் எழுந்ததாக வருத்தம் தெரிவித்தார்.
மேலும் நீதிபதிகள், ‘‘தலைமைப் பதிவாளரின் முன்அனுமதியின்றி நீதிமன்ற ஆடியோ, வீடியோக்களைப் பதிவு செய்யவோ, எடிட் செய்யவோ, சமூக வலைதளங்களில் பகிரவோ கூடாது என்றும், அவற்றைப் பயன்படுத்தி பணம் திரட்டவோ, வணிக ரீதியாகப் பயன்படுத்தவோ கூடாது’’ என்றும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு ஊடகங்களின் வழக்கமான செய்தி சேகரிப்பைக் கட்டுப்படுத்தாது என்றும், பத்திரிகையாளர்கள் வழக்கம் போல நீதிமன்றச் செய்திகளைச் சேகரிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இந்த உத்தரவின் நகல் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.