Select Location
All Locations
State
Region
City / District
“மாணவர்கள் போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திசை திருப்ப முயற்சி” - அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

“மாணவர்கள் போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திசை திருப்ப முயற்சி” - அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

திருச்சி: “மாணவர்களின் போராட்டத்தை உண்மையாக மதிக்கிறோம். ஆனால் சிலர் போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அதை அரசு எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாளும்’’ என்று திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் கூறினார். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. மாணவர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “நீட் விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்துக்கு நியாயமான ஆதரவைத் தருகிறோம் என்று ஏற்கெனவே முதல்வர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டார். மேலும், நீட் தேர்வு முற்றிலும் அகற்றப்பட வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதே நிரந்தர தீர்வு என்றும் ஏற்கெனவே முதல்வர் தெளிவாகத் தெரிவித்துவிட்டார்.

அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். மாணவர்களின் போராட்டத்தை உண்மையாக மதிக்கிறோம். ஆனால் சிலர் போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திசை திருப்ப வேண்டும் என முயற்சிக்கிறார்கள். அதை அரசு எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாளும். சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படுமா என்பது குறித்து முதல்வர் தெரிவிப்பார்.” என்றார். பழநி கோயில் நில மோசடி குறித்துப் பேசுகையில், “பழநி கோயில் நில விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அரசியல் நோக்கத்திற்காக என் மீது பழி போடுகிறார்கள். இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று நான் தான் முதல்வரிடம் தெரிவித்தேன். அப்படி இருந்தால்தான் உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.. எதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் எனத் தெரியாமல் பழநி நிலம் தொடர்பாக சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். அங்கே அப்படி ஒரு நிலம் இருப்பதே எனக்கு இந்தப் பிரச்சினை வந்த பின்பு தான் தெரியும். என்னுடைய உறவினர்களுக்கு, எனக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்று அரசியல் செய்கிறார்கள். இதையெல்லாம் வைத்து அரசியல் செய்யாமல், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் மக்கள் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள்.” என்றார். மேலும், தமிழக பட்ஜெட்டில் திருச்சி மாவட்டத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் என்னென்ன கொண்டு வர வேண்டுமோ அதை கொண்டு வருவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகக் கூறினார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News