இந்தியாவில் உடல் பருமனால் 4.1 கோடி குழந்தைகள் அவதி: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
புதுடெல்லி: இந்தியாவில் 4.1 கோடி குழந்தைகள் அதிக எடையுடனோ அல்லது உடல் பருமனுடனோ அவதிப்படுகின்றனர் என்று உலக உடல் பருமன் அறிக்கை 2026 வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையைத் தடுப்பதற்கான வழிகாட்டு அறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இந்த வாரம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பாக்கெட் உணவுகளுக்குத் தெளிவான ஊட்டச்சத்து குறியீடு, விளம்பரத் தடை, பள்ளிகளில் சத்தான உணவு, அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை உள்ள உணவுகளுக்குக் கூடுதல் வரி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் மற்றும் அதன் 50 மீட்டர் சுற்றளவுக்குள் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எப்எஸ்எஸ்ஏஐ) தடையை, வழக்கமான சோதனைகள் மூலம் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்
அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு கொண்ட உணவுகளுக்குத் தெளிவான சட்ட வரையறை இல்லாததால் விதிகளை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலை தொடர்ந்தால், 2030-க்குள் உலகின் மொத்தச் சிறுவர் உடல் பருமனில் 11 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு இந்தியாவில் இருக்கும். மேலும், நாட்டின் நோய் பாதிப்பில் 56.4 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவுகளாலேயே ஏற்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.