Select Location
All Locations
State
Region
City / District
காமன்வெல்த் போட்டி: பாரா தடகளத்தில் முதல்முறை தங்கம் வென்ற இந்தியா!

காமன்வெல்த் போட்டி: பாரா தடகளத்தில் முதல்முறை தங்கம் வென்ற இந்தியா!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் 5-ஆவது நாளான நேற்று இந்தியா 1 தங்கம் உள்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது. இதில், நேற்று நடைபெற்ற பாரா தடகளப் பிரிவில் (மாற்றுத்திறனாளிகள்) பெண்களுக்கான F57 பிரிவு குண்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் 40 வயதான மாற்றுத்திறனாளி வீரர் ஷர்மிளா தன்கர் கலந்துகொண்டார்

இவர், 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து இந்த சீசனில் அவரது சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார். இவருக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் 8.65 மீட்டர் தூரம் எறிந்த கானாவின் ஜினாபு இசா வெள்ளிப் பதக்கமும், நைஜீரியாவின் யூச்சாரியா இகியாசி 8.19 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஹரியானாவைச் சேர்ந்த ஷர்மிளா, சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் (போலியோ) பாதிக்கப்பட்டவர். குடும்ப வன்முறை, மோசமான சூழல் என பல சவால்களைக் கடந்து 34 வயதிற்குப் பின் விளையாட்டு வாழ்க்கைக்குள் வந்த இவர் இன்று சர்வதேச அளவில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். ஷர்மிளாவின் இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பாரா தடகளப் பிரிவில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேபோல, 2026 தொடரில் இந்தியாவுக்கு இது இரண்டாவது தங்கப் பதக்கமாகும்.

பாரா தடகளத்தில் இதே பிரிவில் இந்தியாவின் மற்றொரு வீரரான சில்பா ஷைலா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம், இந்தியா ஒரே போட்டியில் இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதுவரை பதக்கம் வென்ற இந்தியர்கள்: மீராபாய் சானு (தங்கம், பளுதூக்குதல்), ஷர்மிளா தன்கர் (தங்கம், மகளிர் குண்டு எறிதல் F57), ரிஷிகாந்தா சிங் (வெள்ளி, பளுதூக்குதல்), முத்துப்பாண்டி ராஜா (வெள்ளி, பளுதூக்குதல்), ஞானேஸ்வரி யாதவ் (வெள்ளி, பளுதூக்குதல்), சர்வேஷ் குஷாரே (வெள்ளி, உயரம் தாண்டுதல்), பிந்த்யாராணி தேவி (வெண்கலம், பளுதூக்குதல்) மற்றும் ஜந்து குமார் (வெண்கலம், பாரா பவர்லிஃப்டிங்).


Smacy News 1 hour ago
Home Flash News