Select Location
All Locations
State
Region
City / District
வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல சீரமைக்கும் பணிகள் தீவிரம்!

வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல சீரமைக்கும் பணிகள் தீவிரம்!

சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், சோழிங்கநல்லூர் கிராமம் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையின் இணைப்பு மேம்பாலம் அருகே அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியினை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் இன்று (ஜூலை 28) கொடி அசைத்து தொடங்கி வைத்து கள ஆய்வு செய்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவுப்படி இன்று (ஜூலை 28 செவ்வாய்கிழமை) சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப்பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு, சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம் சோழிங்கநல்லூர், கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையின் இணைப்பு மேம்பாலம் அருகே அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கள ஆய்வு செய்து தொடக்கி வைத்தார்

அடையாறு ஆற்றை தூர்வாரி சீரமைக்கும் பணி: அடையாறு ஆறு சென்னை நகரின் மூன்று முக்கிய ஆற்றுப்படுகையில் ஒன்றாகும். அடையாறு ஆறு ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி மொத்தம் 42.38கி.மீ நீளத்திற்கு பயணித்து பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அடையாறு ஆற்றின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு 808 சதுர.கிமீ ஆகும். மேலும் அடையாறு ஆறு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஏரிகளிலிருந்தும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீரையும், மழை நீரையும் கடலில் கலக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் அடையாறு ஆற்றில் தொலைதூரம் 17.18 கி.மீ கலக்கிறது. பின் அடையாறு ஆறு 17 கி.மீ சென்னை மாவட்டத்தில் பாய்ந்து கடலில் கலக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் ஓடும் இந்த ஆற்றில் ஆகாயத்தாமரைகள் மிதவைத் தாவரங்கள் மற்றும் மிதவைப் பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்வதன் காரணத்தினால், அடையாறு ஆற்றில் விமான நிலைய ஓடுபாதை கீழ் நீரோட்டப்பாதை முதல் திரு.வி.க பாலம் வரை மற்றும் அடையாறு முகத்துவாரத்தில் பணி மேற்கொள்ளப்படுவதால், சென்னை பெருநகர பகுதிகளான மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றில் மழை மற்றும் வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை ஆகும். தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி பக்கிங்ஹாம் கால்வாய் பழவேற்காடு ஏரியிலிருந்து மரக்காணம் உப்பங்கழினி வரை உள்ளது. 167 கி.மீ நீளமும் 20 முதல் 100 மீட்டர் வரை மாறுபட்ட அகலம் கொண்டுள்ளது. தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆற்றின் பகுதியில் இருந்து முட்டுக்காடு முகத்துவாரம் வரை சுமார் 23.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காலங்களில் இக்கால்வாயில் சுமார் 8000 கன அடி மழைநீரானது ஒக்கியம் மடுவு வழியாக வங்காள விரிகுடாவில் சென்று சங்கமிக்கிறது.

சோழிங்கநல்லூர் பகுதியில், கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை இணைப்பு மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் அதிக அளவில் ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருள்கள் மேலே உள்ள பள்ளிக்கரணை மற்றும் ஒக்கியமடுவு போன்ற பகுதிகளில் இருந்து நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டும், மேலும் அப்பகுதியில் வளர்ந்துள்ள நீர்த்தாவரங்களும் சேர்ந்து அதிக அளவில் காணப்படுகிறது. இது நீரோட்டத்தை கடுமையாக பாதிப்பது மட்டுமின்றி, நீர் கடத்தும் திறனையும் குறைக்கின்றது. இதனால், மழைக்காலங்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு வெள்ள அபாயம் அதிகரிப்பதுடன் பொது மக்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும். தேவையற்ற நீர்த்தேக்கத்தினால் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியாவது மட்டுமின்றி, சுகாதார கேடும் ஏற்படுகின்றது. இவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, முதல்வரின் உத்தரவுப்படி, நீர்வளத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள, தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் அமைந்துள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருள்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி சென்று கடலில் கலக்க வழிவகை செய்யப்படவுள்ளது. பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு முடிக்க முதல்வரின் உத்தரவுப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Dinamani 1 hour ago
Home Flash News