Select Location
All Locations
State
Region
City / District
மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் அதிமுக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்” என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 2018-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகத் தெளிவாக “காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரின் பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்தேன். 

தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் அதிமுக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. காவிரி நதி தமிழகத்தின் ஜீவ நதி. பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்பு, உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”. 


News 7 Tamil 12 hours ago
Home Flash News