Select Location
All Locations
State
Region
City / District
“எதுவும் பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பதற்குக் கண்டனம்” - இ.பி.எஸ். விளாசல்!

“எதுவும் பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பதற்குக் கண்டனம்” - இ.பி.எஸ். விளாசல்!

2026 தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், த.வெ.க. - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50% கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்தபின் ரூ. 75,000/-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது.

பொய்க்கால் குதிரை அரசின் இந்த பயிர்க் கடன் அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி, அதிமுக சார்பில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் 6.8.2026 அன்று தாக்கல் செய்யும்போது, பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து 2026 தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், த.வெ.க. கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.


Nakkeeran 3 hours ago
Home Flash News