லாசன் டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா
புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் லாசன் நகரில் வரும் 21-ம் தேதி டயமண்ட் லீக் தடகள போட்டி நடைபெறுகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்குகிறார். சமீபத்தில் முடிவடைந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சீசனின் சிறந்த செயல்பாட்டுடன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். லாசன் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ராவுக்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவரும் உலகின் முன்னணி வீரருமான இலங்கையின் ருமேஷ் பதிரகே, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், நடப்பு உலக சாம்பியனான டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கேஷார்ன் வால்காட், கிரெனடாவின் முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியின் தாமஸ் ரோலர் உள்ளிட்டோர் கடும் சவால்தரக்கூடும்.
மேலும் இந்தப்போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜேக்கப் வத்லேச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், சுவிட்சர்லாந்தின் சைமன் வீலாண்ட் மற்றும் இந்த சீசனின் உலக தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். நீரஜ் சோப்ரா கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற லாசன் டயமண்ட் லீக் தொடரில் 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தொடர்ந்து 2024-ம் ஆண்டு தொடரில் 89.49 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். மறுபுறம், 89.75 மீட்டர் தூரம் எறிந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பதிரகே, மிகுந்த தன்னம்பிக்கையுடனும் சிறப்பான ஃபார்முடனும் லாசன் டயமண்ட் லீக் போட்டிக்கு வருகிறார். கடந்த ஜூன் மாதம் ரோமில் நடைபெற்ற ‘கோல்டன் கலா பியட்ரோ மென்னியா’ போட்டியில் 92.62 மீட்டர் தூரம் எறிந்ததே பதிரகேவின் தனிப்பட்ட சிறந்த சாதனையாகும். இதன் மூலம் இந்த சீசனில் 90 மீட்டர் இலக்கைக் கடந்த ஒரே ஈட்டி எறிதல் வீரராக அவர் திகழ்கிறார்.