அதிமுக எங்க கட்சி; தவெக-ல சேர போறீங்களான எங்க கிட்ட கேக்குறதே தப்புங்க.. எஸ்.பி.வேலுமணி பேட்டி
சென்னை: அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி-யில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோர் தவெக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் ஆகியோரை சந்தித்து பேசினர்.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் இவர்கள் ஆளும் அமைச்சர்களை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, தொகுதி தொடர்பான கோரிக்கைகள் குறித்தே அமைச்சர்களை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டார். அதிமுக எங்கள் கட்சி, நாங்கள் அதில் தான் தொடர்வோம்.
இதை எப்போதோ நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நாங்கள் ஏன் தவெக-விற்கு ஆதரவளித்தோம் என்பதை பலமுறை சொல்லிவிட்டோம். அதனால் நாங்கள் தவெக-விற்கு செல்கிறோமோ என்ற கேள்வியே உங்களுக்கு தேவையில்லை, அதிமுக எங்கள் கட்சி, எங்களை வளர்த்தெடுத்த கட்சி. ஆனால் பலர் தேவையில்லாமல் நாங்கள் தவெக-வில் சேர போவதாக கிளப்பி விடுகிறார்கள். அதனால் எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு என்றார்.