முதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசு மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து இன்று கலந்தாய்வு நடத்த தமிழக எம்.பி.க்களுக்கு முதல்வா் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் கட்சி தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ளவே எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்ட தவெகவுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அன்புமணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று பேசினார். அதில், ”காங்கிரஸ் யாருக்கும் அழுத்தம் கொடுக்கிற கட்சி கிடையாது. அன்புமணிக்கு பாஜகவிடமிருந்து அழுத்தல் இருக்கலாம்.
மோடியிடம் இருந்து அழுத்தம் இருக்கலாம். பாஜக கொண்டு வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அவர் ஆதரிப்பாரா என நீங்கள் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அடுத்தமுறை கேள்வி கேளுங்கள்.
தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்து தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கவும், குறைக்கவும் செய்யப்போகும் இந்தச் சதியை எதிர்த்துப் பேசாத சில கட்சிகளில் மிக முக்கியமான கட்சி பாமக. நம் அனைவருக்கும் தெரியும் தமிழக முதல்வர் விஜய்க்கு அழுத்தம் கொடுத்து யாரும் எதையும் செய்ய முடியாது. அவரைப் பொறுத்தவரை எந்தவொரு அழுத்தத்திற்கும் ஆளாகாதவர். அவர் மிகத் தெளிவாக எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டும் முடிவை எடுத்திருக்கிறார்.
அவர் நினைத்திருந்தால் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை மட்டும் கூட்டியிருக்கலாம். நான் 18 ஆண்டுகளாக எம்.பி. ஆக உள்ளேன். இதுவரை அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை எந்த முதல்வரும் கூட்டியதில்லை. முதல்முறையாக ஒரு விஷயத்தை விவாதிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் முதல்வர் விஜய் அழைத்திருப்பது ஒரு நல்ல தொடக்கம். என்னைப் பொறுத்தவரை பல மாநிலங்களில் நடைபெறாத ஒரு முக்கிய நிகழ்வு இது” என்றார்.