சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நீதிபதிகளாகவும், கூடுதல் நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இந்திய குடியரசுத் தலைவரால் சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.
முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவிக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என். குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.