நீட் போராட்டத்தில் காவல் துறை அத்துமீறல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில் உயர்மட்ட குழு
புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தின் போது நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில் உயர்மட்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறையினரின் அடக்குமுறை, வரம்பு மீறிய செயல்கள், பெண் போராட்டக்காரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், காவலர்கள் மீதான தாக்குதல், மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் அடங்கிய பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 18ம் தேதி விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “நீட் போராட்டம் தொடர்பாக எழுந்துள்ள அனைத்து விதமான பிரச்சனைகளையும் ஆராய ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்படும்” என்றனர். அதன்படி, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில், அரியானா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவிசங்கர் ஜா, டெல்லி உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சைலேந்தர் கவுர், சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் ரிஷி குமார் சுக்லா, மேகாலயா மாநில முன்னாள் டி.ஜி.பி எல்.ஆர்.பிஷ்னோய் ஆகியோர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உயர்மட்ட குழுவானது, நீட் போராட்டத்தின்போது காவல்துறையால் பயன்படுத்தப்பட்ட அதீத பலப் பிரயோகம், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், பாலியல் சீண்டல் மற்றும் இணையவழித் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தும், காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்தி, இழப்பீடு தொடர்பாகவும் பரிந்துரைக்கவுள்ளது. இந்த உயர் மட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.