Select Location
All Locations
State
Region
City / District
“வெற்றிப் பயணம்” - மகளிருக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன முதல்வர் விஜய்!

“வெற்றிப் பயணம்” - மகளிருக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன முதல்வர் விஜய்!

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் விஜய் இன்று (24.08.2026) வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்ததாவது, “ஒரு மாநிலத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது அதன் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமல்ல; பெண் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம் மற்றும் சமூக வாழ்வின் அனைத்து தளங்களிலும் பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்புகளாலும் அளவிடப்படுகிறது. மகளிரின் பயண சுதந்திரம் அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும், குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தில், மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கிலோமீட்டர் வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக ‘வெற்றி பயணம்’ என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக மாநகரம் மற்றும் நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி, மாநகரம் மற்றும் நகர் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக, புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ, மேற்கொள்ள விரும்பும் பயணங்களின் எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை.

‘வெற்றி பயணம்’ திட்டம் எதிர்காலச் சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப்போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். இதன் மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காகவும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும். ‘வெற்றி பயணம்’ என்பது கட்டணமில்லா ஒரு பேருந்துப் பயணம் மட்டுமல்ல; ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின் வேலைவாய்ப்பு, ஒரு தாயின் குடும்பப் பொறுப்பு, ஒரு தொழில் முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடாகும். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மகளிரின் இயக்க சுதந்திரத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு உறுதுணையாக இருக்கும். 

இத்திட்டத்தின் கீழ் திருநங்கைகளும் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம். ‘வெற்றி பயணம்’ வழியாக மகளிரின் வாய்ப்புகள் விரிவடைந்து, குடும்பங்கள் முன்னேறி, சமூகநீதியும் சமத்துவமும் நிலைபெற்று, வளமான வெற்றி தமிழ்நாட்டை உருவாக்கும் நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக ரூ.6,000 கோடி செலவினம் ஏற்படும்.” எனத் தெரிவித்தார்.


Nakkeeran 49 minutes ago
Home Flash News