முதல் நாள் பள்ளி செல்லும் மகள்; ரோல்ஸ்ராய் காரின் வடிவமைப்பை மாற்றிய தந்தை
துபாயில் வசித்து வரும் தங்க வியாபாரி ஒருவர் தனது மகள், முதல் நாள் பள்ளி செல்லும் அனுபவத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார். அதனால், தனது விலை மதிப்பு மிக்க ரோல்ஸ்ராய்ஸ் காரை பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கேற்ப நேர்த்தியாகவும் அழகாகவும் மாற்றியமைத்துள்ளார்.
அந்த உயர் ரக சொகுசு காரில், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பள்ளிப் பொருட்களின் சிறப்பு ஸ்டிக்கர்கள் இடம்பெற்றிருந்தன. அதே நேரத்தில், மிகப் பெரிய பென்சில்களும், ஒரு பெரிய அளவுகோலும் வாகனத்தின் மேற்கூரையின் மீது பொருத்தப்பட்டிருந்தன. மேலும், அந்த காரின் மீது ’தஹப்’ என அந்தச் சிறுமியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. தஹப் என்பதற்குத் தங்கம் என்று பொருள் என்றும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. மகளின் மகிழ்ச்சிக்காகவும், விருப்பத்திற்காகவும் ஒரு தந்தையின் செயல்பாடு சிறப்பு மிக்கது எனப் பாராட்டப்படுகிறது. அதே நேரத்தில், அது செல்வத்தின் அதீத வெளிப்பாடா? என்றும், இது மற்ற குழந்தைகளை அது எப்படி உணர வைக்கும்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அந்த சிறுமியை மற்ற குழந்தைகளிடம் இருந்து தனித்துவிட இது போன்ற செயல்கள் வழிவகுத்துவிடும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.