Select Location
All Locations
State
Region
City / District
“தவறுதலாக சொல்லிவிட்டேன்...” - இந்தி மொழி தொடர்பான பேச்சிற்கு சிவராஜ் குமார் மன்னிப்பு

“தவறுதலாக சொல்லிவிட்டேன்...” - இந்தி மொழி தொடர்பான பேச்சிற்கு சிவராஜ் குமார் மன்னிப்பு

பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் புதிதாக நடிக்கும் படம் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’. இப்படம் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாக்கப்படும் நிலையில் சிவராஜ் குமாரின் முதல் இந்தி படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா கடந்த மாத இறுதியில் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவராஜ்குமாரிடம் இந்தியில் பேசி நடிப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தி எனது இரண்டாவது மொழி. என்னால் இந்தி பேச முடியும். அது ஒரு எளிதான மொழி, நாட்டின் தேசிய மொழி. அது எங்களுக்குத் தெரியாமல் எப்படி இருக்கும்? தெரியும்” என்றார். இது கன்னட ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தற்போது தனது பேச்சிற்கு சிவராஜ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். அதே ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் புரொமோஷன் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் இந்தியை 'தேசிய மொழி' என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அது பல மொழிகளில் ஒன்றுதான். எங்கள் மொழியான கன்னடம் எங்களுக்கு எப்போதும் முக்கியமானது. நான் தவறாகக் குறிப்பிட்டதால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுடைய மொழி இந்தி, எங்களுடையது கன்னடம். அவர்களுக்கு அவர்களுடைய மொழி எந்த அளவு முக்கியமோ அதேபோல, எங்களுக்கு எங்கள் மொழி முக்கியம்” என்றார்.

ஆர். சந்துரு இயக்கும் 'ஒரிஜினல் மான்ஸ்டர்' படம் 1990-கள் மற்றும் 2000-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடக்கிறது. இப்படத்தை தவிர்த்து 'பெயில்', 'டாட்' மற்றும் '666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்' எனப் பல படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். தமிழில் 'ஜெயிலர் 2' மற்றும் 'பிக்காசோ' ஆகிய படங்களை வைத்துள்ளார். தொடர்ந்து பிஸியாக இயங்கி வரும் ஒரு பெரிய நடிகர் தவறுதலாக ஒரு கருத்தை தெரிவித்து அதற்காக மன்னிப்பு கேட்டிருப்பது திரைத்துறையில் கவனம் பெற்றுள்ளது.


Nakkeeran 58 minutes ago
Home Flash News