காயமடைந்த உக்ரைன் வீரர்களை மீட்க பிரத்யேக டிரோன்
கீவ்: ரஷ்யா உடனான போரின்போது காயமடைந்த வீரர்களை டிரோன் மூலமாக மீட்கும் நடவடிக்கையை உக்ரைன் தொடங்கி உள்ளது. உக்ரைன் ராணுவம் போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவதற்கு பிரத்யேக வான்வழி மீட்பு டிரோன்கள் மூலமாக மீட்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. ஸ்டார்கேட் என்று பெயரிடப்பட்ட இந்த புதிய வகை டிரோன் ஆறு ரோட்டர்ஸ்(Rotors) கொண்ட ஒரு விமானமாகும். இதில் காயமடைந்தவர்களை ஏற்றிச்செல்வதற்கான பிரத்யேக அறை பொருத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்கைபால் உருவாக்கியுள்ள இந்த டிரோன் எளிதில் அணுக முடியாத போர் மண்டலங்களை அடைந்து மீட்பு நேரத்தை பல மணி நேரங்களில் இருந்து நிமிடங்களாக குறைக்கும் நோக்கம் கொண்டது. 150கிலோ எடையை தாங்கக்கூடியது. ரஷ்யாவின் மின்னணு போர் அமைப்புகளை எதிர்கொள்வதற்காக சிக்னல் ஜாமர்கள் மற்றும் தானியங்கி வழிசெலுத்துதல் வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மேற்கொள்ளப்படட இரண்டு தனித்தனி மீட்பு பணிகளில் இந்த டிரோன் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லைக்கு அருகில் சிக்கியிருந்த இரண்டு வீரர்கள் இத்தகைய மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்சென்றதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.