ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட அசம்பாவிதங்களை தடுக்க 1.10 லட்சம் போலீஸ் கண்காணிப்பு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட அசம்பாவிதங்களை தடுக்க 1.10 லட்சம் போலீஸ் கண்காணிப்பு: நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்
சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை உட்பட மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு அன்று நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகளுக்கு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் வகையில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகளுடன் தயாராகி வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற கார் வெடி விபத்தை தொடர்ந்து எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அனைத்து மாநில உள்துறைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் புத்தாண்டு முதல் நாள் மற்றும் புத்தாண்டு அன்று பொதுமக்கள் கூடும் இடங்கள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.