மரணத்திலும் மனிதாபிமானம்: ஆதரவற்ற உடல்களுக்கு உற்ற துணையாகி ஆளுநர் விருது பெற்ற விஜயகுமார்
திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மற்றும் யோகா ஆசிரியர் விஜயகுமார், தனது மனைவி சித்ரா மற்றும் மகள் கீர்த்தனாவுடன் இணைந்து ஆதரவற்ற உடல்களை கண்ணியமாக நல்லடக்கம் செய்து வரும் மனிதநேய சேவைக்காக 2025-ஆம் ஆண்டின் ஆளுநர் விருதைப் பெற்றுள்ளார். சென்னை மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்ற விழாவில், சமூக சேவை தனிநபர் பிரிவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு இந்த விருதை வழங்கினார்.
புராண காலந்தொட்டு மயானங்களுக்கு பெண்கள் செல்லும் தடைகளை உடைத்து, குடும்பத்துடன் இணைந்து அடையாளம் தெரியாத மற்றும் உறவுகளால் கைவிடப்பட்ட உடல்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்து வரும் அவரது பணி சமூக மாற்றத்தையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்துகிறது. விபத்தில் சிதைந்த உடல்கள் முதல் ஆற்றில் இருந்து மீட்கப்படும் உடல்கள் வரை அனைத்தையும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து, ஒரு மகன் அல்லது மகள் செய்வது போல கடமையாற்றி வருவதாக அவர் கூறுகிறார்.
'அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை' மூலம் வீடற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் நலன், உபரி உணவு விநியோகம், இலவச நூலகம், பாரம்பரிய காட்சியகம் ஆகியவற்றையும் முன்னெடுத்து வரும் இவர், கொரோனா காலத்தில் உயிரைப் பணையம் வைத்து சேவை செய்ததுடன் 25 முறைக்கும் மேல் ரத்த தானம் செய்துள்ளார். 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள அவர், தனது உடலை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க பதிவு செய்துள்ளதும், சமூகத்திற்கு ஒரு பெரும் முன்னுதாரணமாக விளங்குகிறது.