நிலத்தடி குழாய் தோண்டியபோது சிக்கிய புதையல்... மழையிலும் சேற்றிலும் கண்டெடுக்கப்பட்ட 700 வருட வரலாற்று சொத்து!
தென்மேற்கு ஜெர்மனியின் கிளோட்டர்தால் நகரில் நிலத்தடி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிளாஸ் வோல்கர், மண்ணுக்குள் மின்னிய சிறு உலோகத் தகடுகளை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதல் நாளிலேயே சுமார் 1,000 நாணயங்களையும், அடுத்த நாள் கனமழையிலும் முழங்கால் அளவு சேற்றில் மெட்டல் டிடெக்டர்களைப் பயன்படுத்தி மேலும் 600 நாணயங்களையும் மீட்டனர்.
மொத்தம் 1,600 நாணயங்கள் கி.பி. 1320 காலத்தைச் சேர்ந்தவை என்றும், அவை 14-ஆம் நூற்றாண்டில் சுமார் 150 ஆடுகளை வாங்கும் அளவு மதிப்புடையவை என்றும் கூறப்படுகிறது.
இந்த நாணயங்கள் ஜெர்மனியின் பிரைசாக், பிரைபர்க் மட்டுமின்றி சுவிட்சர்லாந்தின் சோஃபிங்கன், சூரிச் மற்றும் பிரான்சின் கோல்மார் போன்ற பல நகரங்களில் அச்சடிக்கப்பட்டவை.
இது அக்கால வர்த்தகத் தொடர்புகளை காட்டுகிறது. கிளோட்டர்தால் பகுதி சுரங்கத் தொழிலுக்குப் புகழ்பெற்றிருந்ததால், அரசியல் குழப்பம் அல்லது போர்க்கால ஊதியமாக இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது, இந்த புதையல் மூலம் 700 ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளி வணிகமும் மக்களின் வாழ்க்கை முறையும் ஆய்வு செய்யத் தொல்பொருள் துறை தயாராகி வருகிறது.