கடந்த 5 ஆண்டுகளில் அறநிலையத் துறைக்கு ரூ.1,190 கோடி நிதி: 4,332 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தியதாக அரசு பெருமிதம்
சென்னை: வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.1,190 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2021 மே 7-ம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது தொடங்கி 2026 பிப்.22 (நேற்று) வரை, 20 முதல் 400 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத 4,332 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 12,931 கோயில்களில் ரூ.8,101 கோடி மதிப்பீட்டில் 29,479 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ரூ.4,346 கோடி மதிப்பிலான 16,756 பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், நன்கொடையாளர் நிதி மூலம் ரூ.2,001 கோடி மதிப்பீட்டில் 12,220 பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல, 1,055 கோயில்களுக்குச் சொந்தமான ரூ.8,436 கோடி மதிப்பிலான 8,107 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டு, 5,000 கோயில்களுக்கு ரூ.106 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
21 கோயில்களில் பயன்பாடு இல்லாத தங்க நகைகள் உள்ளிட்ட வற்றை மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி 1,074 கிலோ 123 கிராம் சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில்களுக்கு ஆண்டுதோறும் ரூ.17.81 கோடி வருமானம் கிடைக்கிறது.
கோயில்கள் சார்பில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் 2,800 இலவச திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள 19,000 கோயில்களுக்கான வைப்பு நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டு, இதற்காக மட்டும் ரூ.335 கோடி அரசு நிதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு, வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1,189.83 கோடி அரசு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.