திருப்பதி கோவிலில் வருகிற 19-ந்தேதி யுகாதி ஆஸ்தானம்
திருப்பதி கோவிலில் 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி ஆஸ்தானம், ஆனிவார ஆஸ் தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் முந்தைய செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடப்பது வழக்கம். அதன்படி வருகிற 19-ந்தேதி யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
அதையொட்டி கோவிலில் 17-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் 16-ந்தேதி ஏற்கப்படமாட்டாது. இருப்பினும், முக்கிய பிரமுகர்கள் மட்டும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர். அதேபோல் 19-ந்தேதி கோவிலில் நடக்கும் யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் 18-ந்தேதி ஏற்கப்படமாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.