துணை ராணுவப் படையினர், போலீஸார் திருவள்ளூர், பல்லாவரத்தில் கொடி அணிவகுப்பு
திருவள்ளூர் / செங்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திருவள்ளூர், பல்லாவரத்தில் நேற்று துணை ராணுவப் படையினர், போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும்.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணி மேற்கொள்ள துணை ராணுவப் படையினர் 90 பேர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு கடந்த 9-ம் தேதி வருகை புரிந்தனர்.
பிறகு, அவர்கள் திருவள்ளூர் அருகே கனகவல்லிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று திருவள்ளூரில் திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாண், திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் தலைமையில் துணை ராணுவ படையினர் 90 பேர், 40 போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருவள்ளூர், ஜெ.என்.சாலையில் காமராஜர் சிலை அருகே தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு திருவள்ளூர் பேருந்து நிலையம், தேரடி, மோதிலால் தெரு ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று வடக்கு ராஜவீதி பகுதியில் முடிவுற்றது.
பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதிக்கு 90 துணை ராணுவத்தினர் வரவைக்கப்பட்டு, பம்மல், நல்ல தம்பி சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.