அ.இ.பு.த.மு.க. - தொண்டன் தொடங்கிய கட்சியில் இணைந்த சசிகலா: எம்.ஜி.ஆர் பாணியில் புதிய பயணம்
தமிழ்நாட்டு மக்களை திமுக கசக்கிப் பிழிந்து கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் பார்த்த நான், இதற்கு ஒரு முடிவு கட்டும் எண்ணத்தில் புதிய கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தேன். தமிழக அரசியலில் இன்று ஒரு புதிய அதிரடி திருப்பமாக, வி.கே. சசிகலா தனது புதிய அரசியல் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த அறிவிப்புகளை வெளியிட்டார் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்;
”இந்தப் புதிய இயக்கம் சசிகலாவால் தொடங்கப்பட்டது அல்ல; எம் மீது மாறாப் பற்று கொண்ட, ஒரு உண்மையான தொண்டனால் தொடங்கப்பட்ட இயக்கம்.
'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற இந்தப் பேரியக்கத்தில், அந்தத் தொண்டனின் அழைப்பை ஏற்று, என்னை நான் இணைத்துக் கொள்கிறேன்.
அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் இப்படித்தான் தொண்டர்கள் தொடங்கிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றினார். அதே பாதையில் நானும் பயணிக்கிறேன்.
தென்னந்தோப்பு சின்னம் - ஒரு கூட்டுக்குடும்பம்:
நமக்குக் கிடைத்திருக்கும் இந்த 'தென்னந்தோப்பு' சின்னம் வெறும் அடையாளம் அல்ல; அது ஒரு தத்துவம்.
தனிமரம் தோப்பாகாது என்பது பழமொழி. நாங்கள் தனிமரமாக வரவில்லை, ஒரு பெரும் தோப்பாகவே வந்துள்ளோம். நாங்கள் எப்போதும் மக்களோடு இருக்கிறோம் என்பதற்கு எங்களுக்குக் கிடைத்துள்ள இந்தத் தென்னந்தோப்பு சின்னமே சான்று
தமிழ்நாட்டு மக்களை திமுக கசக்கிப் பிழிந்து கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் பார்த்த நான், இதற்கு ஒரு முடிவு கட்டும் எண்ணத்தில் பிப்.24ஆம் தேதி புதிய கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தேன்.
ஏழை எளியவர்களின் கண்ணீரைத் துடைக்க, அம்மா காட்டிய அதே வழியில் அறப்போர் நடத்த நான் வந்துவிட்டேன். அதற்கான முதற்படி தான் இந்த அறிவிப்பு.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தமிழகத்தின் உண்மையான விதியை மாற்றப்போகும் களம். அஇபுதமுக ஒரு பெரும் சக்தியாக விஸ்வரூபம் எடுக்கும். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் தோளோடு தோள் நின்று, ஒரு பலமான கூட்டணியோடு தேர்தலைச் சந்திப்போம்” இவ்வாறு சசிகலா கூறினார்.