மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் 74 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்க மறுப்பு: முதல்வர் மம்தா அதிரடி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதியில் 291 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்து விட்டது. தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 74 பேருக்கு சீட் வழங்கவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அம்தங்கா தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட ரபிகுர் ரஹ்மானுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக, பீர்பாதா காசெம் சித்திக்கியை அத்தொகுதிக்கான வேட்பாளராகக் கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து, அங்குப் போராட்டங்கள் வெடித்தன. ரஹ்மானின் ஆதரவாளர்கள் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அம்தங்கா-காகினாரா சாலையை மறித்து, டயர்களை எரித்தனர்; மேலும் ரஹ்மானுக்கு ஆதரவாகவும், கட்சிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதே போல் ராஜ்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ-வான ககேஸ்வர் ராய்க்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஜல்பைகுரி மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இவரும் 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அந்த தொகுதியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தங்கப் பதக்க வீராங்கனை ஸ்வப்னா பர்மன் நிறுத்தப்பட்டிருக்கிறார். மேலும் ஜல்பைகுரி மாவட்ட திரிணாமுல் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து ராய் விலகினார். அவர் கூறுகையில்,’ யாரோ பணம் கொடுத்திருக்க வேண்டும்; அதனால்தான் என் பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. எனக்கு இழைக்கப்பட்ட அநீதியின் காரணமாகவே நான் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் ’ என்றார்.