‘சர்வதேச சந்தைக்கு வழங்க உபரி கச்சா எண்ணெய் இல்லை’ - கையை விரித்த ஈரான்; கலக்கத்தில் அமெரிக்கா!
தெஹ்ரான்: 'தற்போதைய நிலையில், சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்வதற்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள கச்சா எண்ணெயோ அல்லது உபரி எண்ணெய் கையிருப்போ இல்லை' என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, மார்ச் 20 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்தும் அமெரிக்காவின் நடவடிக்கையை, ஈரானின் எண்ணெய் அமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "தற்போதைய நிலையில், சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில், கப்பலில் ஏற்றப்பட்ட நிலையில் உள்ள கச்சா எண்ணெய் அல்லது உபரி கையிருப்பு ஏதும் ஈரானிடம் இல்லை. தடைகளை தளர்த்தும் அமெரிக்காவின் கருத்துக்கள், எண்ணெய் வாங்குவோருக்கு நம்பிக்கையூட்டுவதையும், சந்தையின் மனநிலையைச் சீர்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் மோதல் நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, சர்வதேச எண்ணெய் எரிவாயு சந்தை ஏற்கனவே பெரும் நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தரப்பிலிருந்து வந்துள்ள இந்த மறுப்புச் செய்தி, நிலையற்ற சந்தையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். முன்னதாக, ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான தடைகளை, இந்த ஆண்டு ஏப்ரல் 19 வரை தற்காலிகமாகத் தளர்த்துவதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்தத் தளர்வின் கீழ், ஈரான் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை அமெரிக்காவிற்குள் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, மார்ச் 20 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை உலக நாடுகளுக்கு விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எண்ணெய் எரிவாயு போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இது உலகளாவிய எண்ணெய், எரிசக்தி விநியோகத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.