சமயபுரம் கோயிலில் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பக்தர் உயிரிழப்பு
திருச்சி: சமயபுரம் கோயில் நுழைவு மண்டபத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் உயிரிழந்தார். காயமடைந்த தாய், மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த நான்கு வாரங்களாக நடைபெற்று வருகிறது. மாசி மாதம் கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை பக்தர்கள் பச்சைபட்டினி விரதம் இருப்பர். இதில் வாரம்தோறும் ஞாயிறு கிழமை அன்று பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவர். அந்த வகையில் இன்று 4வது பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதற்காக உள்ளூர், வெளி மாவட்ட பக்தர்கள் நேற்று இரவே கோயிலுக்கு வந்து தங்கினர். திருவையாறு, செபாஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன் மனைவி நதியா (32), அவரது உறவினர்கள் தஞ்சாவூர், கள்ளப்பெரம்பூர், மாதாக்கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி ரஞ்சனி (35), இவது மகள் பப்பிக்ஷா (14) ஆகியோர் கோயிலுக்கு நேற்று இரவு வந்துள்ளனர். இன்று காலை அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயில் சன்னதி வீதியில் உள்ள நுழைவு வாயில் மண்டபத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படுத்து உறங்கிக் கொண்டிருந்த நதியா உள்ளிட்ட மூன்று பெண் பக்தர்கள் மீது மண்டபத்தின் கான்கிரீட் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே நதியா பரிதாபமாக உயிரிழந்தார். ரஞ்சனி, பாபிக்ஷா பலத்த காயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்த மற்ற பக்தர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டபானி தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து வந்து நதியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சமயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சமயபுரம் கோயில் இணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோயில் அலுவலர்கள் அங்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். ரத்தம் படிந்திருந்த தரையை சுத்தம் செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கோயிலின் கிழக்கு வாசல் நுழைவு வாயில் மண்டபப் பகுதி பேரி கார்டு வைத்து அடைக்கப்பட்டது. வடக்கு வாசல், தெற்கு வாசல் வழியாக பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.