மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?'-மத்திய அரசின் பதில் என்ன?
"ஒன்றாக வசிக்கும் (live-in relationship) ஒரு ஜோடியை திருமணமான தம்பதியாகக் கருதலாமா?" என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மத்திய அரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இக்கணக்கெடுப்பில் லிவ் இன் முறையில் வாழ்பவர்களை எவ்வாறு கணக்கெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நிலையான லிவ் இன் உறவில் இருக்கும் தம்பதிகளை திருமணமான தம்பதிகளாகக் கணக்கெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய-விவரப் பதிவேற்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கேள்விக்கு அளித்துள்ள விளக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
"சுய-விவரப் பதிவேற்றத்தின் போதோ அல்லது கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போதோ, ஒன்றாக வசிக்கும் (live-in relationship) ஒரு ஜோடியை திருமணமான தம்பதியாகக் கருதலாமா?" என்ற கேள்விக்கு, அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், ''அந்த ஜோடி தங்கள் உறவை ஒரு நிலையான பிணைப்பாகக் கருதினால், அவர்கள் திருமணமான தம்பதிகளாகவே நடத்தப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.