"அஞ்சலி நாயர் என மாற்றுங்கள்" - வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் மாற்றக் கோரும் நடிகை அஞ்சலி
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை சட்டசபை தொகுதியில் பா.ஜ.க கூட்டணி கட்சியான டிவெண்டி 20 கட்சி வேட்பாளராக நடிகை அஞ்சலி நாயர் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக சி.பி.எம் வேட்பாளராக கே.என்.உன்னிகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளராக தீபக் ஜோய் போன்றோர் களத்தில் உள்ளனர். கேரள பா.ஜ.க கூட்டணியில் உள்ள டிவெண்டி 20 கட்சி வேட்பாளர்கள் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அஞ்சலி நாயருக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தெருக்களில் நடந்து சென்று 'சக்க' (பலாப்பழம்) சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அஞ்சலி நாயர் என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானாலும், அரசுப் பதிவுகளில் அஞ்சலி பி.வி என்றுதான் அவரது பெயர் உள்ளது.
அரசு ஆவணங்களின்படி வேட்புமனுத் தாக்கல் செய்ததால் அவரது பெயர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 'அஞ்சலி பி.வி' எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயரை அஞ்சலி நாயர் எனப் பதிவுசெய்ய வேண்டும் என கொச்சியில் உள்ள ஐகோர்ட்டில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து அஞ்சலி நாயர் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் மனுவில் அஞ்சலி பி.வி என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தாலும், பொது வாழ்விலும் திரைத்துறையிலும் எனது பெயர் அஞ்சலி நாயர் என்று உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதும், போஸ்டர்கள் வெளியிட்டதிலும் அஞ்சலி நாயர் என்றே எனது பெயர் உள்ளது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அஞ்சலி பி.வி என்று இருப்பதால் ஓட்டுப்போட வரும் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை இழக்க நேரிடும். எனவே அஞ்சலி பி.வி. என்பதை மாற்றி அஞ்சலி நாயர் என்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்ய வேண்டும் எனக் கோரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்திருந்தேன்.
தேர்தல் அதிகாரியிடம் தேவையான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். ஆனால் தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானபோதும் எனது பெயர் அஞ்சலி பி.வி. என்றே பதிவாகியுள்ளது. அதில் திருத்தம் செய்யக் கோரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மீண்டும் விண்ணப்பித்த போதிலும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். அஞ்சலி பி.வி என்பதற்கு பதில் அஞ்சலி நாயர் என்ற பெயரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த உத்தரவிட வேண்டும் என மனுவின் கூறி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.