பினராயி விஜயன் ஒரு ‘வலதுசாரி கைப்பாவை’ - கேரள தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு
இடுக்கி: நாடு முழுவதும் வெறுப்பை பரப்புவோரின் உத்தரவுகளை மட்டுமே பின்பற்றும் ஒரு வலதுசாரி கைப்பாவையாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ‘‘இடது ஜனநாயக முன்னணி தன்னை இடதுசாரி என்று அழைத்துக்கொள்கிறது. ஆனால், அந்த இடது முன்னணியில் இடதுசாரித் தன்மை என்று எதுவுமே எஞ்சியிருக்கவில்லை.
இந்த தேர்தலுக்குப் பிறகு அந்த இடது முன்னணி முழுமையாக அழிந்துவிடும்.
நாடு முழுவதும் வெறுப்பை பரப்பி வருபவர்களுடன் முதல்வர் பினராயி விஜயன் கூட்டு வைத்துள்ளார். அவர்களின் கைப்பாவையாக இருந்து அரசாங்கத்தை இயக்கி வருகிறார். இதன்மூலம் அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கும் கேரள மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளார்.
முதல்வரும் அவரது குடும்பத்தினரும் பணத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில், கேரள மாநிலம் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது.
கேரளாவில் உள்ள நெல் விவசாயிகளில் ஏறக்குறைய 75% பேர் கடன் சுமையில் உள்ளனர். இந்த விஷயத்தில் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெல் கொள்முதலில் அளவுக்கு அதிகமான தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், முதல்வரின் கவனம் வேறு எங்கோ உள்ளது.
கேரளாவில் உள்ள மூன்று இளைஞர்களில் ஒருவர் வேலையின்றி தவிக்கிறார். இடதுசாரி இயக்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை உள்ளது. போதைப் பொருள் பயன்பாட்டில் நாட்டிலேயே கேரளா முதலிடத்தில் உள்ளது.