அமைதியாக சாதித்து காட்டிய வைஷாலி
சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டின் பாஃபோஸ் நகரில் நடைபெற்றது. இதன் 14-வது மற்றும் கடைசி சுற்று நேற்றுமுன்தினம் நடந்தது. ஆடவர் பிரிவில் ஏற்கெனவே பட்டம் வெல்வதை உறுதி செய்திருந்த உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்த்ரோவ், சீனாவின் வெய்யியுடன் டிரா செய்தார். 14 சுற்றுகளின் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த சிந்த்ரோவ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட தகுதி பெற்றார். அவர், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் குகேஷுடன் விளையாட இருக்கிறார்.
மகளிர் பிரிவு கடைசி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோவை எதிர்கொண்டார். வெள்ளைநிற காய்களுடன் ஆடிய வைஷாலி 48-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அவருடன் சவாலுக்கு நின்ற கஜகஸ்தானின் பிபிசாரா அசவுபயேவா கடைசி சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக்குடன் டிரா செய்தார். முடிவில் வைஷாலி 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டியில் வாகை சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை 24 வயதான வைஷாலி படைத்தார். அத்துடன் ஆண்டின் இறுதியில் நடக்கும் மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனா சீன வீராங்கனை ஜூ வென்ஜூனுடன் மோதும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்ற 8 வீராங்கனைகளில், மிகக்குறைந்த ரேட்டிங் கொண்ட வீராங்கனையாகவே தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ஆர்.வைஷாலி களமிறங்கினார். இருப்பினும், தனது அமைதியான ஆட்டத்தின் மூலம் பதில் சொன்ன அவர், ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். வைஷாலியின் சகோதரரான பிரக்ஞானந்தாவும் கேண்டிடேட்ஸ் தொடரின் போட்டியிட்டார். ஆனால் அவர், 6 புள்ளியுடன் 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். பிரக்ஞானந்தாவின் வாய்ப்புகள் மங்கிய பிறகும் கூட தொடரின் ஒட்டுமொத்த கவனமும் வைஷாலியின் பக்கம் திரும்பவில்லை. தரவரிசையில் கடைசியாக இருந்தபோதும் அமைதியாகவும் அதேவேளையில் ஆழமாகவும் செயல்பட்ட வைஷாலி முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி சாதித்துள்ளார்.